பங்களாதேஷில் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சி செய்ததால் தலைநகர் டாக்காவில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து பாராளுமன்றம் உட்பட சகல அரச அலுவலகங்களிலும் இராணுவம், பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் கொலை செய்யப்பட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் இறுதிச் சடங்கு நேற்று சனிக்கிழமை (20) இடம் பெற்றது . குறித்த இறுதிச் சடங்கில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் பங்கேற்றார்.

மேலும், ஹாடியின் மறைவையொட்டி ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுமென்று அரசு அறிவித்துள்ளது.

 இதனிடையே, மைமென்சிங் நகரில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் எனும் இளைஞர், இஸ்லாம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி ஒரு கும்பல் நேற்றுமுன்தினம் (19) அவரை சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கினர். இத்தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் இக்கும்பல் தீபு சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தது.

இதனால் பங்களாதேஷில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

 இதற்கிடையில், பங்களாதேஷில் தொடர்ந்து போராட்டம், பேரணி, வன்முறைச் சம்பவங்கள்  தொடர்கின்றன. நேற்று (20) மாலை பங்களாதேஷின் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர். பின்னர் அவர்கள் பாராளுமன்றத்துக்குள்ளே நுழைய முயற்சித்தனர். பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முயன்றதால் பெரும் பதற்றமும் ஏற்பட்டது.

 இதனையடுத்து இராணுவ வீரர்கள், பொலிஸார் அவர்களை தடுத்து விரட்டியடித்தனர். தலைநகரில் பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாராளுமன்றம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களிலும் பெருமளவிலான இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், “இளைஞர் தீபு சந்திர தாஸ் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 07 பேர் கைது செய்யப்பட்டனர்" என்றும் தெரிவிக்கப்படுகிறது.