இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானிய வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டதாகப் பாகிஸ்தான் பயிற்சியாளரான மைக் ஹெசன் கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய (14) ஆட்டத்தில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பங்கேற்றன.
இப்போட்டியில், இந்தியா 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் பின்னர், இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவும் சிவம் துபேவும், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போதும், பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கத் தயாரான போதும், இந்திய வீரர்கள் ஏற்கனவே ஓய்வு அறைக்குத் திரும்பிவிட்டனர்.
முன்னதாக சூர்யகுமாருக்கும் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகாவுக்கும் இடையே நாணயச் சுழற்சியின் போதும் கைகுலுக்கல் நிகழவில்லை.
வெளிப்படையாக, ஆட்டத்தின் முடிவில் தாம் கைகுலுக்கத் தயாராக இருந்ததாக பாகிஸ்தானிய அணி பயிற்றுவிப்பாளரான நியூஸிலாந்தின் மைக் ஹசன் கூறியுள்ளார்.
எனினும், எதிரணி நடந்து கொண்ட விதத்தில் தாம் ஏமாற்றமடைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போட்டிக்குப் பின்னரான பரிசளிப்பு நிகழ்வின்போது பேசிய சூர்யகுமார் தமது அணியின் வெற்றி இந்தியாவுக்குக் கிடைத்த பரிசு என்றும் விபரித்தார்.
பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தாம் துணை நிற்பதாகவும், தாம் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமது வெற்றியை மிகுந்த துணிச்சலைக் காட்டிய இந்திய நாட்டின் அனைத்து ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், குறித்த நிகழ்வில் எந்தவொரு பாகிஸ்தான் வீரர்களும் பேசவில்லை.
02 நாடுகளும் பஹல்கம் தீவிரவாத தாக்குதலின் பின்னர் போர் ஒன்றைச் சந்தித்த நிலையில், இடம் பெற்ற முதல் போட்டி என்ற வகையில், இவ்விடயங்கள், கிரிக்கெட் வரலாற்றில் பேசப்படும் விடயங்களாக மாறியுள்ளன.
0 Comments