கிண்ணியா - கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்று (27) காலையில் நிகழ்ந்த கோர விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழைக்கு மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது இப்புனுள்ளா (55) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, மீன் வியாபாரம் செய்து வந்த முஹம்மது இப்புனுள்ளா, இன்று (27) காலை கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார்.
அப்போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலையே இவ்விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments