ICC மகளிர் உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் முகம்மது வாசீமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நீக்கியுள்ளது.
இத்தொடரில் மொத்தமாக 07 போட்டிகளில் விளையாடிய பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறவில்லை.
தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறாதது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளரான முகமது வாசீம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முகமது வாசீமின் ஒப்பந்தம் உலகக் கிண்ணத்துடன் நிறைவு பெற்றதாகவும், அதனால், அவரின் ஒப்பந்தத்தை நீடிக்காமல் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது வாசீமின் தலைமையின்கீழ் கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக்கிண்ண அரையிறுதி, டி20 உலகக்கிண்ண லீக் சுற்று உள்ளிட்டவற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதுவும் அவரது ஒப்பந்தம் முடித்துக் கொள்ள காரணமாக அமைந்துள்ளது. பயிற்சியாளர் மட்டுமின்றி உதவியாளர்கள் பலரும் நீக்கப்பட்டுள்ளனர்.

0 Comments