இலங்கையின் கல்வித் திட்டத்தை மாற்ற வேண்டுமென்று தற்போது எழுதிக் கொண்டு இருப்பவர்கள் அநேகமானோர் வைத்தியர்களாக உள்ளார்கள்.
அதுவும் மருத்துவ நிபுணர்களாக உள்ளனர். அதற்கான காரணம், அவர்களின் வெளிநாட்டுப் பயிற்சியின்போது, பிள்ளைகள் ஒரு வருடமேனும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் கல்வி கற்று இருப்பார்கள்.
அந்த நாடுகளின் கல்வி முறைமையை நேரடியாகப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் அந்த மருந்துவ நிபுணர்கள். நேற்று என்னுடைய நண்பனும், மனைவியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். இலங்கையில் கணவன் - மனைவி இருவரும் மருத்துவ நிபுணர்கள்.
மாளிகை மாதிரி வீடு, பெரிய கார், வேலைக்காரர் என்று வசதியாக இருந்தாலும், மூன்று வருடங்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். அதற்கான காரணம் மகன் !
வெளிநாட்டு பயிற்சிக்கு இங்கிலாந்து வந்த போது, மகன் 02 வருடங்கள் இங்கிலாந்தில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை போன பின்னர் அவனால் இலங்கை பாடசாலையில் படிப்பை தொடரமுடியவில்லை .
நல்ல கெட்டிக்கார பெடியன். ஆனால், இங்கிலாந்து கல்வி முறைக்கு 02 வருடங்கள் பழக்கப்பட்ட பின்னர் அவனால் அங்கே படிப்பில் ஒட்ட முடியவில்லை .
இத்தனைக்கும் அவனுக்கு இலங்கையில் கிடைகப்பெற்ற ஆசிரியர்களும் சிறந்தவர்கள்.
ஆசிரியரே அழைத்து, "நல்ல கெட்டிக்கார பெடியன். ஆனால், அவனால் இங்கே தொடர முடியாது, சர்வதேச பாடசாலையிலாவது சேர்த்து விடுங்கள்" என்று ஆலோசனை கூறியுள்ளார். பிள்ளைக்காக மீண்டும் இங்கிலாந்து வந்து விட்டார்கள் பெற்றோர்கள்.
இன்று இலங்கையில் மருத்துவ நிபுணர்களாக இருக்கின்ற எனது நண்பர்கள் அநேகமானோர் எந்தளவு வசதியாக இருந்தாலும், பிள்ளை எவ்வளவு பெரிய பாடசாலையில் படித்தாலும் இன்றும் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அவர்களுக்கு ஒரு கவலை இருந்து கொண்டே உள்ளது.
படிப்பு சம்பந்தமான கவலை என்றால் பிள்ளை, நல்ல பெறுபேறு எடுக்குமா? என்ற கவலையில்லை.
இலங்கையில் பல்கலைக்கழகம் கிடைக்காமல் விட்டாலும், எந்தவொரு நாட்டிலும் நல்ல ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கும் வசதியுள்ளவர்கள். இருந்தாலும் கவலைப்படுகின்றனர்.
அதற்கான காரணம், கல்வி என்பது இலங்கையில் இருப்பது போன்று பரீட்சைகளை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல என்று நேரடியாக பார்த்தவர்கள் அவர்கள்.
நேற்று எனது வீட்டுக்கு வந்த நண்பனின் மூத்த மகள் இங்கிலாந்தில் A/ல் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறாள்.
அவளுக்கு Fashion Designing படித்து உலகப்புகழ் பெற்ற Fashion Designer ஆக வரவேண்டும் என்பதே கனவு. பாடசாலையில் உயர்தரத்தில் ஒரு பாடமாக அதனை படிக்கிறாள்.
அவள் பாடசாலையில் அது சம்பந்தமாக செய்தவற்றை பார்த்து, அவள் A/L பரீட்சை எழுத முன்னரே ஒரு பல்கலைக்கழகம் அவளுக்கு அந்தப் பட்டப் படிப்புக்கான அனுமதியை கொடுத்துள்ளது.
அவள் உயர் தரத்தில் என்ன பெறுபேறு பெற்றாலும், அவள் விரும்பிய பட்டப்படிப்பை அந்தப் பல்கலைக் கழகத்தில் தொடரலாம்.
இருந்தாலும் அவள் கவனமாக A/ல் படிக்கிறாள். ஏனென்றால், அவளுக்கு அந்த படிப்பில் முதல் ரேங் உள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு ஆசை. அதற்கு நல்ல பெறுபேறு தேவை என்பதற்காகவே கஷ்டப்பட்டு படிக்கிறாள்.
A/ல் இல்லாமலே அனுமதி கிடைத்தாலும், பல்கலைக்கழகம் சரியில்லை என்று அவள் போக விரும்பாத பல்கலைக்கழகத்தின் உலகத் தரவரிசையை தேடிப் பார்த்தேன். அது உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 97 வது இடத்தில் உள்ளது.
அதாவது இலங்கை பல்கலைக்கழகங்களில் 1000 இற்குள் ஒரு பல்கலைக்கழகமும் இல்லாத தரப்படுத்தலில் 97 வது தரப்படுத்தலில் உள்ளது.
இத்தனைக்கும் அவள் இங்கிலாந்து பிரஜை இல்லை. பல்கலைக்கழகமும் அவளை இலங்கை பிரஜையாகவே கருதும். அப்படியிருந்தும் அவளது பாடசாலை செயற்பாடுகளை மட்டும் வைத்து அவளுக்கு A/L பரீட்சை முடிவில் தங்கியிருக்காமல், A/L பரீட்சை எழுத முன்னரே ஒரு பல்கலைக்கழகம் அனுமதி கொடுத்துள்ளது.
இதை எல்லாம் எழுதக் காரணம், இலங்கை கல்வித் திட்டத்தை குறை சொல்லவோ, மட்டம் தட்டவோ இல்லை. இலங்கையில் காலத்துக்கேற்ப கல்வித் திட்டத்தில் மாற்றம் தேவை, அது உங்களுக்காக அல்ல. உங்களுடைய பிள்ளைகளுக்காக.
பாலியல் ரீதியாக பிள்ளைகள் கெட்டுப் போய் விடுமென்று அறப்படிச்ச காரணங்களை சொல்லி உங்களுடைய பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும், நாமலும், சஜித்தும், திலீப்பும், சுமந்திரனும் தீர்மானிப்பதற்கு விட்டு விடாதீர்கள்.

0 Comments