Ticker

6/recent/ticker-posts

05 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் மரணம்: பிரேத பரிசோதனைக்கு ஆட்சேபனை.

 திடீரென உயிரிழக்கும் 05 வயதுக்கு குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லையென்றால், உயிரிழப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத ஒவ்வொரு 05 வயதுக்கு குறைவான சிறுவர்களின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.


இந்நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை (28) நீதி அமைச்சினால் விஷேட நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. எனவே, சுகாதார அமைச்சின் இத்தீர்மானத்துக்கு எதிரான சாட்சிகள் எதுவும் இருக்குமாக இருந்தால் அக்குழுவில் சமர்ப்பிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 



அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



இவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,


‘‘தாய், சேய் சுகாதாரம் தொடர்பில் இலங்கை ஆசிய நாடுகளிலும் உலக நாடுகளிலும் உயர்தரத்தை கொண்டதொரு நாடாகும். அவ்வாறு இருந்தாலும் 2022 ஆம் ஆண்டு 1,800 சிறுவர்கள் அகால மரணமடைந்துள்ளதுடன் 05 வயதுக்கு குறைவாக 3,300 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இது இருந்தை விட மிகவும் அபாயகரமானதொரு நிலைமையாகும்.



இது தொடர்பில் சுகாதார அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தது. உலகிலும் இது தொடர்பில் பல விதிமுறைகள் இருக்கின்றன. அதற்கமைய, உயிரிழப்புக்கான காரணத்தை அறியாத, 05 வயதுக்கு குறைவான சிறுவர்களின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்பது சுகாதார அமைச்சின் பரிந்துரையாகும். காரணத்தை கண்டறியாமல் குறித்த உயிரிழப்பை கைவிட்டால் அவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும். தாய்மாரின் உயிரிழப்பு தொடர்பில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, குறித்த உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறிவதனூடாகவே தாய்மாரின் உயிரிழப்புகளினை மட்டுப்படுத்தியுள்ளோம்.



எனவே, மேற்குறிப்பிட்டது போன்று இந்த உயிரிழப்புகள் குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியமை சரியானதொரு விடயமாகும். இத்தொகை உண்மையானது என்பதால், சிறுவர்களின் உயிரிழப்புகளை மூடிமறைக்க முடியாது. இதன் காரணமாகவே காரணங்கள் தெரியாமல் உயிரிழக்கும் சிறுவர்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை முன்னெடுக்க வேண்டுமென்று சுகாதார அமைச்சு தீர்மானித்தது.



இந்நிலையில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது. 05 வயதுக்கு குறைவான குழந்தை உயிரிழந்திருந்தது. ஆனால், குழந்தை உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. அதற்கமைய, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியான வைத்தியர் ஐ.எம்.ஜவாஹீர், உயிரிழந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.



ஆனால், திடீர் மரண விசாரணை அதிகாரி பிரேத பரிசோதனையினை மேற்கொள்ளாமலும் எந்தவொரு காரணங்களையும் அறிவிக்காமலும் விடுவித்துள்ளார். இப்பிரச்சினை உக்கிரமடைந்து அதனை அரசியல் தேவைக்காக பயன்படுத்தியமையினாலேயே இதனை மீளாய்வு செய்ய வேண்டுமென்று தீர்மானித்தோம்.



சுகாதார அமைச்சினை பொறுத்தவரையில் இது முக்கியமான செயற்பாடாகும். உயிரிழப்புகளுக்கான காரணம் தெரியுமாக இருக்கும் பட்சத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படாது. காரணம் தெரியாவிட்டால் மாத்திரமே இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு விடயமாகும். இதற்கென தனியாக காலம் வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இவ்விடயம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அக்குழுவின் தீர்மானத்துக்கெதிரான சாட்சிகளை சமர்ப்பிக்க முடியும்’’ என்றார்.


Post a Comment

0 Comments