Ticker

10/recent/ticker-posts

தென்னக்கோனை பதவி நீக்குவதற்கு வாக்கெடுப்பு: சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவிப்பு

 பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் பிரகாரம் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்தி வாக்கெடுப்பை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.


கடந்த புதன்கிழமை (23) சபாநாயகர் அறிவிப்பின் போதே அவர் பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். சபாநாயகர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் பதவி அதிகாரங்களை பாரதூரமான வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சபைக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. 

இதன்படி 2025 ஜூலை 22 ஆம் திகதி சபையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் ஆங்கில பிரதி அன்றைய தினமே பாராளுமன்றத்தின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையை அச்சிட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வறிக்கையின்படி தேசபந்து தென்னக்கோன் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2001/05ஆம் இலக்க பதவிநிலைகளை நீக்குதல் தொடர்பான ஏற்பாடுகளுக்கு அமைய 17ஆம் சரத்தின் பிரகாரம் அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனையை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளையில் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27 க்கு அமைய இந்த யோசனை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு 05 நாட்களின் பின்பு, இது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படுவதுடன், அது தொடர்பில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவினால் தீர்மானிக்கப்படுகின்ற நாளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இதன்படி பாராளுமன்றத்தில் சமூகமளிக்காத உறுப்பினர்கள் உள்ளடங்கலாக மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments