உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு அமைச்சரான 'டயல்லா' (Diella) விரைவில் 83 குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் என்று அல்பேனியப் பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 செப்டம்பரில், அல்பேனியா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட, டயல்லா (Diella) என்பது ஒரு அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்பாகும். ஊழலைக் கட்டுப்படுத்தவும், பொதுக் கொள்முதல் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மனிதத் தலையீடு இன்றி, தரவுகள் மற்றும் வழிமுறைகள் (Algorithms) மூலம் இவர் முடிவுகளை எடுப்பார் என்று அல்பேனியா பிரதமர் தெரிவித்தார்.
அவ்வகையில், அல்பேனியா உலகிலேயே முதல் முறையாக AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்தது. இந்நிலையில், 'டயல்லா' விரைவில் 83 குழந்தைகளுக்குத் தாயாகப் போகிறார் என்றும் அல்பேனியப் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.
பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் மாநாட்டில் வைத்து (Global Dialogue) இந்த ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், டயல்லாவின் 83 குழந்தைகள் என்பது ஆளும் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் (AI Assistants) ஆவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவியாளர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் நிகழ்வுகளையும் பதிவு செய்வார்கள். தங்களுடைய தலைவர்களுக்கு கொள்கை ஆலோசனைகளையும், விவாதங்களுக்குப் பதிலளிப்பதற்கான எதிர்வாதங்களையும் (Counter Arguments) உடனடியாக வழங்க இவர்கள் பயிற்சியளிக்கப்படுவார்கள்.
"இக்குழந்தைகளுக்கு அவர்களின் தாயின் (டயல்லா) அறிவு முழுவதும் இருக்கும்" என்றும் பிரதமர் ராமா மேலும் தெரிவித்தார்.
பொதுக் கொள்முதல் துறையை '100% ஊழலற்றதாக' மாற்றுவதே டயல்லாவின் முக்கியப் பணியென்றும், குறித்த 83 புதிய செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் மூலம் நாடாளுமன்றச் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்று அல்பேனிய அரசு நம்புவதாகவும், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் முழுமையாகச் செயற்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments