இலங்கையின் 80 வது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிகவுள்ளதோடு, விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை மற்றும் அறைகள் உட்பட நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நேற்றைய தினம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற காட்சியகம் இன்று சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும் நிகழ்வைக் காண உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 02 வது வரவு - செலவுத் திட்டமாகவும் காணப்படுகின்றது.
நாளை (08) முதல் எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
2025 நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதன் பின்னர் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 05 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு - செலவுத் திட்ட விவாதம் இடம் பெறவுள்ளது.
2026 நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், மற்றும் கைத்தொழிற்றுறையினர் என பலரும் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.
இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபா, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபா, அரச நிர்வாகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பாரியளவு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹெவகே மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக கொடுப்பனவு தொகை வழங்குதல், அஸ்வெசும கொடுப்பனவு தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நலன் திட்டங்கள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசாங்கம் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் இதன் மூலமாக மக்களுக்கான நலன் திட்டங்களை மேலும் அதிகரிக்க முடியும் என்று பிரதியமைச்சர் நளின் ஹேவகே மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments