இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ராசையா என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் "மஸ்தானா... மஸ்தானா..." என்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.
அதே போன்று அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, பிரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்துள்ளார். இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. குறிப்பிட்ட சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி உயிரிழந்தார். AI மூலம் கோட் திரைப்படத்தில் பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இளையராஜா தன் மகள் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’ ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரித்துள்ளார். இதில் விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்ற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என்று குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments