Ticker

10/recent/ticker-posts

பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்: எரிந்து கருகிய புத்தகங்கள்

GCE (A/L) பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப் புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர், பலாங்கொடை சமனலவெவ - சீலகம பகுதியில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுவரும் ஒருவரென்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 09 ஆம் திகதி இரவு, மதுபோதையில் வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் சந்தேக நபரின் மகள் பரீட்சை அனுமதி அட்டை, சீருடை மற்றும் சில புத்தகங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு தாயுடன் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் அன்று இரவு வீட்டுக்கு வந்து தீ வைத்ததால், வீட்டின் ஒரு பகுதி எரிந்ததுடன், பரீட்சை எழுத உள்ள மாணவியின் மீதமிருந்த அனைத்துப் புத்தகங்களும், உடைகளும் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆரம்பத்தில், தனது வீட்டிற்கு வேறு யாரோ தீ வைத்ததாகச் சந்தேக நபர் தெரிவித்த போதிலும், பொலிஸாரின் தொடர் விசாரணையில், தானே தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வீடு தீக்கிரையாகி, புத்தகங்கள் அனைத்தும் அழிந்த போதிலும், குறித்த மாணவி மனம் தளராமல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments