2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் (1447 ஹிஜ்ரி) யாத்திரையை முன்னிட்டு, இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து சவூதி அரேபியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆவணத்தின் படி, யாத்திரிகர்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற உடல் ரீதியாக தகுதியானவர்களாக இருக்க வேண்டுமெனவும், பின்வரும் நிலைகளில் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது:
- முக்கிய உறுப்புக்களின் செயற்பாடுகளில் பலவீனம் (கிட்னி டயாலிசிஸ், இதய செயலிழப்பு, கல்லீரல் நோய் போன்றவை).
- கடுமையான நரம்பியல் அல்லது மனநோய் குறைபாடுகள்.
- மனநிலை குறைபாடுகளுடன் கூடிய முதியோர்.
- கர்ப்பிணிகள் (கடைசி 03 மாதங்களில்)
- (டிபி, வைரஸ் காய்ச்சல் போன்ற) தொற்று நோயாளிகள்.
- புற்றுநோய்க்கு கீமோதெரபி பெறுபவர்கள்
மேலும், 2025–2026 ஹஜ் பருவத்திற்கு முன் யாத்திரிகர்கள் COVID - 19 தடுப்பூசி பெற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றிலிருந்து மீண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய தடுப்பூசிகள்:
அனைத்து யாத்திரிகர்களும் மூளைக் காய்ச்சல் வகைக்குட்பட்ட மெனிங்கோகோகல் மெனிஞ்ஜைட்டிஸ் (Meningococcal Meningitis) நோய்க்கெதிராக ACYW அல்லது ACWXY வகை தடுப்பூசியை, பயணத்திற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பும் அதிகபட்சம் 05 வருடங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுக் கட்டுப்பாடுகள்:
சில குறித்துரைக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சவூதி அரேபியா சுகாதார அதிகாரிகளால் மேலதிக சுகாதார பரிசோதனைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டப்படலாமெனவும், உலக சுகாதார நிறுவனத்துடனான (WHO) உடனான ஒருங்கிணைப்புடன் சவூதி சுகாதார அமைச்சு சர்வதேச சுகாதார அவச ரநிலைகளுக்கேற்ற மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழிகாட்டி இலங்கை ஹஜ் மிஷன் மூலமாக, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் வழிகாட்டலின் கீழ், 2025 அக்டோபர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments