தாமதமாக பாடசாலைக்கு சென்ற மாணவியொருவருக்கு வழங்கிய தண்டனையால் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
தரம் - 06 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவரை தாமதமாக பாடசாலைக்கு வந்தமையால் 100 தடவைகள் உட்கார்ந்து எழும்புமாறு பாடசாலையின் ஆசிரியர் பணித்ததையடுத்து, குறித்த மாணவியும் அதனைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட தாக்கத்தினால் உயிர் பிரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவி உயிரிழந்ததையடுத்து, பெற்றோர்களும், உள்ளூர் மக்களும் பாடசாலைக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தண்டனைக்கு ஆளான மாணவி கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் உடல் நிலை மோசமடைந்ததால் குறித்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், உடல் நிலைமை மேலும் மோசமடைந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments