மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் நேற்று (10) காலை சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், முன்னாள் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (60) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டபோது இவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் குறித்த இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் என்பவரும் சடலத்தை பார்வையிட்டார். மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொண்டு வருகின்றனர்.

0 Comments