இண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு போயிருந்தேன்.
அந்த வைத்தியசாலையின் வைத்தியர் கைராசிக்காரர். எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. எப்போது போனாலும் குறைந்தது 30 பேருக்கு நோயாளிகள் காத்திருப்பார்கள்.
நான் சென்ற சமயத்தில் பலரும் mobile-ஐ நோண்டிக் கொண்டிருக்க ஒரு அம்மா மாத்திரம் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார் - அது பைபிள் அல்ல, ஆனால், கிறிஸ்தவ மதத்துடன் தொடர்புடைய ஒரு புத்தகமாகும்.
எனது வரிசை இலக்கம் 33, அவருடைய இலக்கம் 29 அல்லது 30 ஆக இருக்க வேண்டும்.
குறித்த அத்தாயிடம், அருகில் இருந்த மற்றுமொரு பெண் மெதுவாக பேச்சுக் கொடுத்தார். அதனை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அந்த தாய் சொன்னார். "நான் ஒரு ஆசிரியை. இப்போது கொழும்பில் பணியாற்றுகின்றேன். இந்த வைத்தியருக்கு நான் கற்பித்திருக்கின்றேன். என்னுடைய மாணவர் இவர், இவருடைய தம்பியும் என்னுடைய மாணவன்தான். அவரும் ஒரு வைத்தியர்" என்று அவர் சொன்னார்.
"அப்படியென்றால், சொல்லி விட்டு வைத்தியரை போய் சந்தியுங்கள், ஏன் காத்திருக்கின்றீர்கள்?" என பேச்சுக் கொடுத்த அப்பெண் சென்னார்.
ஆனால், அந்த அம்மா “நிச்சயமாக நான் வந்திருக்கின்றேன் என்று தெரிந்தால் வைத்தியர் வந்து என்னை அழைத்துச் சென்று வைத்தியம் பார்ப்பார், ஆனால், அவ்வாறு செய்வது சரியில்லை. இங்கு நிறையப் பேர் காத்திருக்கின்றார்கள், எல்லோரும் பாவம்தானே”? என்றார்.
இது உண்மையாக இருக்குமா? என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.
ஆனால், அந்த சம்பவம் நடந்தது. இந்த தாய் காத்திருந்து வைத்தியர் அறைக்கு சென்ற போது வைத்தியர் எழுந்து நின்று வரவேற்றார். அது மாத்திரமல்ல, பரிசோதனையின் பின்னர் எழுந்து வந்து மருந்துகள் குறித்து விளக்கமளித்து வழியனுப்பி வைத்தார்.
இங்கு வைத்தியர் உயர்ந்து நிற்கவில்லை, அந்தத் தாய் ஒரு ஆசிரியையாக; பொறுப்பான குடிமகளாக; நற்குணங்கள்; நற்பண்புகளை கொண்ட தாயாக உயர்ந்து நிற்கின்றார்.
நம்மில் எத்தனைப் பேர் இப்படி பொறுமையாக வரிசையில் காத்திருந்திருக்கின்றோம் என்று உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள், நீங்களும் அந்தத் தாயை போன்றுதான் என்றால் உங்களை நினைத்து நீங்களே பெருமை கொள்ளுங்கள். நான் ஒரு நாளும் வாய்ப்பு கிடைத்தாலும் முந்திச் செல்வதில்லை.
இவரிடம் கற்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு நான் வைத்தியரிடம் சென்றேன். வைத்தியர் எழுந்து வரவில்லை, நான் சென்று வைத்தியரின் அருகில் அமர்ந்தேன்.
-பார்த்திபன் சண்முகநாதன் -

0 Comments