Ticker

10/recent/ticker-posts

ஈரானின் உயர் தலைவரின் புகைப்படத்தை எரித்த இளைஞர் சடலமாக மீட்பு.

ஈரான் நாட்டின் உயர் தலைவரின் புகைப்படத்தை எரித்து, காணொளியாக வெளியிட்ட 22 வயதுடைய இளைஞரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஈரான் நாட்டின் அரச ஊடகமும் சமூக ஆர்வலர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசால் தடை செய்யப்பட்ட செய்தி இணையத்தள பக்கத்திலேயே Omid Sarlak என்பவர் குறித்த தகவல் வெளியானது.

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் மேற்கு ஈரானின் ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை (01) தனது காரிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவருடைய கைகளில் தோட்டாக்களைப் பயன்படுத்திய தடயங்களும் காணப்பட்டதாக அந்த இணையத்தள பக்கத்தில் கூறப்பட்டது. Sarlak தற்கொலை செய்துகொண்டதாகவே ஈரானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் சார்லக் இன் மரணம் தொடர்பில் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக அவர் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

சார்லக் இன் சடலம் மீட்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளியொன்றில், இஸ்லாமியக் குடியரசின் தலைவர் அலி கமேனியின் புகைப்படத்தை எரிப்பது போன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்விவகாரம் தொடர்பில் சமூக ஆர்வலர்களின் கொந்தளிப்பு தற்போது ஈரான் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களின் ஹீரோவாக மாறிய சார்லக் என்பவரை பின்பற்றி தற்போது பலர் அலி கமேனியின் புகைப்படத்தை எரித்து அதனை சமூக ஊடகத்தில் காணொளியாக பதிவேற்றி வருகின்றனர்.

தற்போது சார்லகின் குடும்பமும் அரசின் கண்காணிப்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை சர்லக்கின் இறுதிச் சடங்கில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சார்லக் விமானப் போக்குவரத்து துறை மாணவராகவும், ஈரானிய மல்யுத்த வீரர் இப்ராஹிம் எஷாகியின் ரசிகராகவும் இருந்த ஒரு அமெச்சூர் குத்துச்சண்டை வீரர் என்றும் தெரிவிக்கப்படுகிறது இந்நிலையில் இறப்பதற்கு சற்று முன்பு, சார்லக் இன்ஸ்டாகிராமில் தன்னைத் தொடர்பு கொண்டதாக எஷாகி தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments