Ticker

10/recent/ticker-posts

அத்தியாவசிய சேவைகள் குறித்தான விசேட அறிவிப்பு.

 அத்தியாவசிய சேவைகள் குறித்தான விசேட அறிவிப்பு வெளியாக்கியுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீவின் அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியான LP எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தி வருகின்றது. அதன்படி, சாதாரண நாட்களில் தினமும் விநியோகிக்கப்படுகின்ற 75,000 எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை இன்று 91,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த நாட்களில் நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 48 உள்ளூர் பிரதேசங்களில் விநியோகப் பாதைகள் தடைப்பட்டுள்ளதால், குறித்த அணுகல் தடைகள் சீரமைக்கப்பட்டவுடன் எரிவாயு விநியோகத்தை விரைவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீர் வழங்கல் சபையால் (NWSDB) சீரமைக்க முடியாத நிலையில் இருந்த பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள 05 நீர் விநியோகத் திட்டங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) உதவியுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள மொத்த 2,947,833 உள்நாட்டு நீர் விநியோக இணைப்புகளில் மேலும் 387,964 இணைப்புகள் இன்னும் சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. நீர் இணைப்புகளை இழந்ததில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், அவற்றின் சீரமைக்கப்படாத சதவீதம் கீழே வழங்கப்பட்டுள்ளது 

கண்டி மாவட்டம்: 66.8%

கேகாலை மாவட்டம்: 75.09%

குருநாகல் மாவட்டம்: 41.34%

புத்தளம் மாவட்டம்: 52.82%

தீவின் தொலைபேசித் தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட அபாய மதிப்பீட்டின் மூலமாக 20% தொலைபேசித் தொடர்பு தடங்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது  இதில் அதிகபட்ச அளவு புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ளது.

இப்பகுதிகளில் மின்சார இணைப்புகள் மீளவும் இயங்க ஆரம்பித்தவுடன் அவற்றை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், இனிவரும் காலங்களில் மின்தடை ஏற்படும்போது தகவல் தொடர்பு பரிமாற்றம் பாதிக்கப்படாதவாறு உரிய தொழிநுட்ப மாற்றீடுகளை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்க இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, முன்னர் போக்குவரத்துக்காகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த 256 சாலைகளில் 231 சாலைகள் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளன. மீதமுள்ள சாலைகளை விரைவாக மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தவிர நிலவழி அணுகல் இன்னும் தடைபட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் சிரமம் காணப்படுகின்ற இடங்களுக்கு இலங்கை விமானப்படையின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பி.கெ.பிரபாத் சந்திரகீர்த்தி
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்




Post a Comment

0 Comments