இந்தியாவின் தூத்துக்குடி – உலகையே அதிர வைத்த சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் படுகொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 09 பொலிஸாருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 06) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
பின்னணி: ஒரு கொடூரமான இரவு
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடை நடாத்தியதாகக் கூறி, சாத்தான் குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். அன்று இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து இருவர் மீதும் நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் காரணமாக, அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேர இடைவெளியில் 2020 ஜூன் 23 ஆம் திகதி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நீதிமன்றத்தின் கடுமையான கண்டனம்
கடந்த 05 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய கௌரவ நீதிபதி முத்துக்குமரன், பொலிஸாரின் செயலை வன்மையாகக் கண்டித்தார். அவருடைய தீர்ப்பில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
அரிதினும் அரிதான வழக்கு: இது ஒரு சாதாரண குற்றமல்ல; நிராயுதபாணிகளாக இருந்த இருவரை இரவு முழுவதுமாக நிர்வாணப்படுத்தி, பழிவாங்கும் நோக்குடன் பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதல் 'அரிதினும் அரிதான' வகையைச் சார்ந்தது.
பதைபதைக்கும் வன்கொடுமை: தந்தை மற்றும் மகனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வாசிப்பதற்கே பதைபதைப்பாகவுள்ளது. இதில் யார் அதிகமாக அடித்தார்கள் என்ற வேறுபாடு காட்ட முடியாது, அனைவருமே கூட்டுப் பொறுப்பாளிகளாவர்.
உச்சபட்ச தண்டனை: வெறுமனே ஆயுள் தண்டனை வழங்கினால் இது போன்ற கொடூரங்களில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் ஏற்படாது. எனவே, 09 பேருக்கும் இரட்டைத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகின்றது.
தண்டனை விபரம்
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் பொலிஸாரான முருகன், முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 09 பேருக்கு குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான பால்துரை விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்து விட்டார்).
தமிழக பொலிஸ் வரலாற்றில் ஒரே வழக்கில் 09 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறை என்று கருதப்படுகிறது. இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பெரும் ஆறுதலை அளித்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments