Ticker

10/recent/ticker-posts

தேசிய மட்ட வீரர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு. முழு விபரம் இதோ!

 தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் நிரந்தர தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான புதிய கொள்கைத் திட்டத்திற்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேசியளவில் சிறந்த திறமைகளைக் கொண்ட வீரர்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான நிலையான தொழில் வாய்ப்புக்கள் நாட்டில் குறைவாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாக, பல வீரர்கள் பொருளாதாரச் சுமை மற்றும் எதிர்காலப் பாதுகாப்புக் கருதி, தமது விளையாட்டுத் துறையிலிருந்து பாதியிலேயே விலகிச் செல்லும் நிலை காணப்படுகின்றது. இது இலங்கையின் சர்வதேச போட்டித்திறனைப் பெருமளவு பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இவ்வாறான வீரர்களுக்கு முப்படைகளில் மாத்திரமே சில வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. விளையாட்டுத் துறை அமைச்சின்கீழுள்ள நிறுவனங்களிலும் மிகக் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளே காணப்பட்டன. இந்த மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்கள் வீரர்களின் நீண்டகாலத் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போதுமானதாக இல்லை என்று அரசாங்கம் கருதுகிறது.

விளையாட்டு வீரர்களின் திறமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தருவதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரினால் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments