Ticker

10/recent/ticker-posts

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் - சிரியா எல்லை.

 ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கிடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

ஈரான் தொடர்பான போர் பதற்றங்களால் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையிலுள்ள ஹோர்முஸ் நீரினைக்கு மாற்றாக இந்நிலவழிப் பாதையைப் பயன்படுத்த முடியும் என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. கடல்வழிப் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது, குறித்த எல்லைப் பாதை ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நிலவழியாக எண்ணெயைக் கொண்டு செல்வது என்பது கடல்வழி மற்றும் குழாய் வழி மூலமான போக்குவரத்தைவிட மிகக் குறைந்த செயற்திறன் கொண்டதென்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கப்பல்கள் மூலமாக கொண்டு செல்லப்படும் எண்ணெயின் அளவோடு ஒப்பிடுகையில், நிலவழிப் போக்குவரத்து செலவு மற்றும் நேரம் அதிகமாக எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திங்கட்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றிய ஈராக் நாட்டின் நினிவே மாகாண சபை உறுப்பினர் நாதியா அல்-ஜுபோரி கூறியதாவது:

"குறித்த எல்லைப் பாதையின் திறப்பு, வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் எண்ணெய் போக்குவரத்துக்கான ஒரு பிரம்மாண்டமான கதவைத் திறந்து விட்டுள்ளது. இது இரண்டு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கும்." என்று தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments