02 வாரங்களுக்குப் போர் நிறுத்தம் செய்வதற்கு பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு
தனது கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் இணங்காவிட்டால், "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்" என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது திட்டமிட்ட குண்டுவீச்சை 02 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை, திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்குள், டிரம்ப் தனது 'Truth Social' தளத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக அவர் அறிவித்தார்.
"பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரான் மீது திட்டமிடப்பட்ட அழிவை நிறுத்தி வைக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை 02 வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக் கொள்கிறேன்," என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் .
ட்ரம்பின் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஒரு தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
"ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், நமது சக்தி வாய்ந்த ஆயுதப் படைகள் தங்களுடைய தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்" என்று அராக்சி குறிப்பிட்டார் .
"இரண்டு வார காலத்திற்கு, ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து மற்றும் தொழிநுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்திற் கொண்டால் , ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும்."
அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதலை நிறுத்துமாறு கடைசி நேரத்தில் வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தானுக்கும் அராக்சி நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்தால், போர் நிறுத்தம் அதன் ஆரம்ப 02 வாரங்களுக்குப் பிறகும் நீடிக்கப்படலாம் என்று ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் ஒரு தனி அறிக்கையில் மேலும் தெரிவித்தது.

0 Comments