இந்தியாவில் நடைபெற்ற 30 வது தெற்காசிய இளையோர் (கனிஷ்ட) மேசைப் பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 03 வெள்ளிப் பதக்கங்களையும், 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, ஒட்டுமொத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினர் இன்று (13) அதிகாலை நாடு திரும்பினர். சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனம், ஆசிய மேசைப் பந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் மேற்பார்வையில் தெற்காசிய மேசைப் பந்தாட்ட சங்கத்தினால் குறித்த போட்டி இந்தியாவின் ஷிம்லாவில் ஏப்ரல் 08 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 05 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மேசைப் பந்தாட்ட வீரர், வீராங்கனைகள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பங்குபற்றினர்.
15 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்குமான அணி நிலைப் போட்டிகள், கலப்பு இரட்டையர் போட்டிகள், இரட்டையர் போட்டிகள் மற்றும் ஒற்றையர் போட்டிகளிலும் இலங்கை பங்குபற்றியது.
ஷிம்லாவில் ஈட்டிய வெற்றிகளின் மூலமாக ஓமானில் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய மேசைப் பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கை இளையோர் மேசைப் பந்தாட்ட அணி தகுதி பெற்றுள்ளது.
இலங்கை வந்தடைந்த மேசைப்பந்தாட்ட அணியினரை வீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments