ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றினை அடுத்த வாரம் நடத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா - ஈரானிடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் 21 ஆம் திகதியன்று முடிவடையவுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு முன்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை நடைபெறுவதனை உறுதிசெய்ய, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த 11 ஆம் திகதி நடந்த பேச்சுவார்த்த்தையின் முதல் சுற்று எந்தவொரு முடிவையும் எட்டாமல் தோல்வியடைந்ததாகவும் அது ஈரானுக்கு கெட்ட செய்தியாக இருக்கும் என்பதையும் அமெரிக்க துணை ஜனாதிபதி J.D. வான்ஸ் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் கடற்படையை முற்றுகையிடப் போவதாக அறிவித்து அதன்படி, முற்றுகையையும் தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments