Ticker

10/recent/ticker-posts

திருமலை சிசு உயிரிழப்பு பாரபட்சமற்ற விசாரணை அவசியம் - அரசாங்க வைத்தியர்கள்

 திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சிசு உயிரிழப்பு சம்பவத்துக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைக்கும் எந்த விதமான தொடர்புமில்லையென்றும் இது தொடர்பில் பாரபட்சமற்ற விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகததாச நேற்று (11) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சிசு உயிரிழந்த நிலையில் பிறந்த சம்பவம் தொடர்பான செய்தி தற்போது ஊடகங்கள் வழியாகப் பரவி வருகின்றது. சில ஊடக நிறுவனங்கள் அதற்குத் தவறான விளக்கங்களை வழங்கி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையுடன் இச்சம்பவத்தை இணைத்து சங்கத்துக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது அவசர சிகிச்சை சேவைகள் எந்நிலையிலும் பாதிக்கப்பட அனுமதிப்பதில்லை. அவசர நோயாளர் சேவைகள், குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், பிரசவ அறைகள் போன்ற இடங்களில் சேவைகள் இடையறாது நடைபெறுவதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது மகப்பேறு வைத்தியசாலைகள், குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள், சிறுநீரக நோய் தொடர்பான வைத்தியசாலைகள், இராணுவ வைத்தியசாலைகள் மற்றும் மனநல மருத்துவ நிறுவனங்களில் சேவைகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் எங்களுடைய கிளைச் சங்கங்கள் மூலமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது பிரசவ அறைச் செயற்பாடுகள் எவ்விதத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்படுவதில்லை.

அச்சேவைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொய்யான தகவல்களை பரப்புகின்ற சில ஊடக நிறுவனங்களின் செயல்களை நாம் கடுமையாகக் கண்டிப்பதுடன் எமது கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இத்துயரகரமான சம்பவம் தொடர்பாக நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் விரைவான விசாரணையொன்று, சம்பந்தப்பட்ட தொழிநுட்ப விடயங்கள் மற்றும் குறித்த துறையில் அறிவும் அனுபவமும் கொண்ட நிபுணர் குழுவின் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சகத்திடம் கோருகிறது. அத்தகைய நிபுணர் குழுவின் மூலமாக நடைபெறும் சுயாதீன விசாரணைக்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments