எரிபொருள் விலை திருத்தத்தையடுத்து டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தினுடைய செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை முன்னெடுத்துச் சென்றோம்.
ஆனால் இப்போது கட்டணத் தொகையை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனை ஒரு சதவீதமாகக் கூறாமல், பெற்றோருக்கு சுமையாக அமையாத வகையில் டீசல் விலை அதிகரிப்புக்கேற்ப உயர்த்துமாறு கோருகிறோம்.
மிகவும் சிரமத்துடனேயே இத்தொழிலைச் செய்து வருகிறோம். பலமுறை டீசல் விலை அதிகரித்தமையால், இச்சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments