சித்திரை புத்தாண்டுக்கான விசேட நிவாரணக் கொடுப்பனவை விநியோகிக்கும்போது ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 50,000 அஸ்வெசும பயனாளிகளுக்கு இரண்டு முறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதை நலன்புரி நன்மைகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக மேலதிகமாக வழங்கப்பட்ட 248.8 மில்லியன் ரூபாவை, மே மாதக் கொடுப்பனவுகளிலிருந்து கழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று (மே 12) சபை வெளியிட்ட அறிக்கையில், 1.7 மில்லியன் பயனாளிக் குடும்பங்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகளை 'ஒருங்கிணைந்த நலன்புரி நன்மைகள் தகவல் அமைப்பிற்கு' வெளியே கைமுறையாக முன்னெடுத்தபோது, ஒரு கோப்பு தவறுதலாக இரண்டு முறை இலங்கை வங்கிக்கு பதிவேற்றப்பட்டதால் இத்தவறு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான வழக்கமான அஸ்வெசும கொடுப்பனவுகள் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் வெற்றிகரமாக வழங்கி முடிக்கப்பட்டன.
மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட விஷேட புத்தாண்டு நிவாரணத்தின் கீழ் பின்வரும் தொகைகள் ஒதுக்கப்பட்டன.
இதனடிப்படையில், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு 7,500 ரூபாய், ஏழ்மையான குடும்பங்களுக்கு 5,000 ரூபாய், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு 2,500 ரூபாவினை மேலதிகமாக வழங்குவதற்கு அரசு தீர்மானித்திருந்த நிலையில், தற்போதுள்ள 'ஒருங்கிணைந்த நலன்புரி நன்மைகள் தகவல் அமைப்புக்கு' தகவல் அமைப்பினால் ஒரே மாதத்தில் 02 வெவ்வேறு கொடுப்பனவுகளைச் செயற்படுத்த முடியாது. இதனால், புத்தாண்டுக்கு முன்னர் பணத்தை வழங்க வேண்டுமென்ற நோக்கில் தகவல் தொழிநுட்பம் மற்றும் நிதிப் பிரிவுகள் இணைந்து கைமுறையாகக் கோப்புகளைத் தயாரித்தன.
இதன்போது, ஒரு கோப்பு தவறுதலாக இரண்டு முறை பதிவேற்றப்பட்டதால், ஏழ்மையான பிரிவைச் சேர்ந்த 49,759 பயனாளிகளுக்கு இரண்டு முறை பணம் கிடைத்துள்ளது.
இத்தவறு கண்டறியப்பட்டதும், மேலதிகக் கொடுப்பனவுகளை முடக்குவதற்கு சபை நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஏற்கனவே அப்பணத்தை வங்கிகளில் இருந்து பெற்று விட்டனர். இதன் விளைவாக, மேலதிகமாகச் சென்றடைந்த 248.8 மில்லியன் ரூபாய், அப்பயனாளிகளின் மே மாதக் கொடுப்பனவிலிருந்து மீளப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments