Ticker

10/recent/ticker-posts

ஈக்வடார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை தண்டனை

 ஈக்வடார் முன்னாள் ஜனாதிபதி லெனின் மொரேனோவுக்கு 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



இவர் சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலையம் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்றுள்ளதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லெனின் மொரேனோ, முன்னாள் ஜனாதிபதி ரப்பேல் கொரியாவின் ஆட்சிக்காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த போது நடைபெற்ற குறித்த இலஞ்சப் பரிமாற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இவ்வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி, மகள், 02 சகோதரர்கள் மற்றும் மைத்துனரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். நீதிமன்றம் அவர்களுக்கு தலா 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. 

73 வயதான மொரேனோ உடல் ஊனமுற்றவர் என்பதால் நடக்க முடியாத நிலையில் உள்ளார். இதனால் அவர் சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவிலுள்ள சினோஹைட்ரோ நிறுவனம் ஈக்வடாரில் கோகா கோடோ சின்க்ளேர் என்ற நீர்மின் நிலையத்தை கட்டுவதற்கான சுமார் 02 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது.

அவ்வொப்பந்தத்தை சினோஹைட்ரோ நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதற்காக அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இலஞ்சத் தொகை திட்டத்தின் மொத்த மதிப்பில் 4% என்று அரசு தரப்பு தெரிவித்தது.


Post a Comment

0 Comments