Ticker

10/recent/ticker-posts

அரச பணியாளர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலனை

அனைத்து அரச பணியாளர்களுடைய ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கானதொரு திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

தற்போதைய சட்டத்தின்படி, ஒரு பொது அரச பணியாளருடைய ஓய்வு பெறும் வயது 60 ஆகும். இருப்பினும், பல விஷேட தொழில்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வயதுப் பிரிவுகள் ஓய்வுபெறும் வயதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 61 வயது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கு 63 வயது, உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு 65 வயது மற்றும் விஷேட மருத்துவ நிபுணர்களுக்கு 63 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதும் மேலும் 02 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு 67 வயதாக உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான இத்திட்டம், சமீப நாட்களாகத் தீவிர சமூக விவாதத்துக்குள்ளாகி வருவதை தொடர்ந்து, பல தொழில் முறை சங்கங்கள் தங்களுடைய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.

இக்கோரிக்கைகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு, சில பொது நிறுவனங்கள் மற்றும் சபைகளின் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் தொழிலாளர் நம்பிக்கை நிதியை (EPF, ETF) மேலும் 05 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க ஒரு வாய்ப்பை வழங்குவதே அனைத்து அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவெடுக்கத் தூண்டிய மற்றொரு காரணமாகும்.

இது அரசாங்கத்துக்கு அதன் பொது நிதி இருப்புகளை வலுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பையும் வழங்கும். இது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைச் செயற்படுத்த உதவும் ஒரு சூழ்நிலையாகும். எனவே, அனைத்து அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


Post a Comment

0 Comments