கண்டி பத்தஹேவா பிரதேச சபைக்கு போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் குழுவின் ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்தை மீறி 08 வாகனங்களில் ஊர்வலமாக செல்ல முயன்ற 33 ஆதரவாளர்கள் கண்டி பொலிஸாரால் நேற்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆதரவாளர்கள் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தலைவர் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் கொடிகளை ஏந்தி சத்தம் போட்டு கொண்டிருந்த போது பொலிஸார் தலையிட்டுக் கட்டுப்படுத்தியதுடன் வாகனங்களுடன் அவர்கள் கண்டி பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேர்தல் சட்டத்தையும் மீறி வாகனப் பேரணிகளை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 06 வேன்கள், 01 ஜீப் மற்றும் ஒரு லொறி ஆகியன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளன.
கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ராசிக் சம்பத் தலைமையில் இது குறித்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

0 Comments