உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, முன்னாள் அமைச்சர் A.LM. அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி – அம்பாறை மாவட்டத்தில் சமர்ப்பித்த 04 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று மாநகர சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை மற்றும் பொத்துவில் பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட குறித்த வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளையில், தேர்தல்களில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் – இவ்வாறு தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களை எதிர்கொள்வதற்காக, தமது சார்பில் சுயேட்சைக் குழுக்களைக் களமிறக்குவது வழமையாகும். ஆனால், எந்தவோர் இடத்திலும் அவ்வாறு சுயேட்சைக் குழுக்களை தமது சார்பில் தேசிய காங்கிரஸ் களமிறக்கவில்லை.
இந்நிலை காரணமாக, இதுவரையில் தேசிய காங்கிரஸ் கட்சி வசமிருந்து வந்ததும், அதாஉல்லாவின் சொந்த ஊரில் அமைந்துள்ளதுமான அக்கரைப்பற்று மாநகர சபையை – A.L.M. அதாஉல்லா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற அதாஉல்லா, அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராகவாவாயினும் இருந்து கொண்டு, தனது பிற்கால அரசியலைச் செய்யலாம் என்ற கனவும், இதனால் கலைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments