தேசபந்து தென்னகோனின் வீட்டிலிருந்து உணவு பெறுவதற்கான கோரிக்கையை சிறைச்சாலைத் துறையினர் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் இருக்கும் போது, வீட்டிலிருந்து உணவு வழங்குமாறு பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபரான தேசபந்து தென்னகோன் விடுத்த கோரிக்கையை சிறைச்சாலைகள் திணைக்களம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசபந்து தென்னகோன் தனக்கான உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவதற்கு அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட கோரிக்கைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த காரணிகளைக் கருத்திற் கொண்டு, திரு. தேசபந்து தென்னகோன் சிறையில் இருக்கும் போது அவருக்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று காமினி பி. திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்த சிறைச்சாலை நிர்வாகம் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்வதற்கு அவருக்கு இன்று (23) அனுமதியளித்துள்ளது.
அத்தோடு, தனக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்ற தேசபந்து தென்னக்கோனின் கோரிக்கையைக் கருத்திற் கொண்டு, தேசபந்து தென்னகோன் சிறைச்சாலைக்குள் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க்கதாகும்.
வெலிகம பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் பின்னர், தேசபந்து தென்னகோன் அண்மையில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனை தொடர்ந்து அவரை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டு, தற்போது தும்பரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

0 Comments