ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணிக்கு அமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்ததொரு முறைமையைத் தயாரிப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு பிரதமரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணிக்கு அமர்த்தல், இடமாற்றம் தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
விசேடமாக வட மத்திய மாகாணத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 06 அதிகாரிகளில் 05 பேர் மீண்டும் இடமாற்றம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதிகாரிகளைப் பணியமர்த்தும் போது சேவையின் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்று பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆசிரியர் கல்வியியலாளர் சேவைஇ ஆசிரியர் நிர்வாக சேவையில் பணிக்கு அமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் இதுவரை முறையான திட்டமொன்றோ பொறிமுறையொன்றோ இல்லையென்றும் தற்பொழுது அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விசேட தேவையுடைய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளை மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments