இலங்கைக்கு வருகை தருகின்ற தங்கள் நாட்டினருக்கு விசா இல்லாத வசதியை மேலும் பல நாடுகள் கோரியுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து, அமைச்சரவை சமீபத்தில் அங்கீகரித்த 40 நாடுகளின் பட்டியலைத் தவிர வேறு எந்நாட்டையும் பரிசீலிக்க தற்போது எந்தத் திட்டமும் இல்லையென்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றது. இது தொடர்பாக அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள் தெரிவிக்கையில்இ '40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் சமர்ப்பித்தோம்.
இந்தப் பட்டியல் சட்டமா அதிபரால் (GA) அங்கீகரிக்கப்படல் வேண்டும், இதன் பிறகு அது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும். தற்போது, இந்த வசதியை மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் இல்லை.'
இலங்கை முன்பு 07 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்கியிருந்தது. சமீபத்திய கொள்கையின் முடிவில் மேலும் 40 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் இப்போது சட்ட மா அதிபரின் ஒப்புதலுக்காக இவை நிலுவையில் உள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நாடுகளின் குடிமக்கள் இலவச சுற்றுலா விசாவிற்கு ஒன்லைனில் (Online) விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் 40 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரான மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் தெரிவித்தார்.
அதனை தொகுக்கும் போது எந்நாட்டிற்கும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது, அந்நிய செலாவணி வருவாயின் முக்கிய இயக்கியாக இலங்கை தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.
நுழைவுத் தேவைகளை தளர்த்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலக சந்தைகளில் பாதுகாப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இடமாக நாட்டை ஊக்குவிப்பதன் மூலமாக அதிக பார்வையாளர்களை ஈர்க்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
0 Comments