Ticker

10/recent/ticker-posts

பயிற்சியின் போது இளம் கிரிக்கெட் வீரர் மரணம். சோகத்தில் ரசிகர்கள்.

கிரிக்கெட் பயிற்சியின் போது தலையில் பந்து தாக்கியதால் பென் ஆஸ்டின் என்ற 17 வயது வீரர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்போது 05 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் T20 போட்டியானது மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

 


இதனை தொடர்ந்து, இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது T20 போட்டி நாளை (31) மெல்போர்னில் உள்ள MCG மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்காக இரண்டு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.


 

இந்த நிலையில், மெல்போர்னில் இருந்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. பயிற்சியின் போது, பந்து தலையில் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரரொருவர் இறந்த சம்பவம் விளையாட்டு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.




 

இதன்படி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதேயான கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் என்பவர் பந்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

 


அவ்வகையில், செவ்வாய்க்கிழமை (27) பென், பயிற்சியின் போது தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தின் உதவியுடன் துடுப்பாட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

அவர் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், பந்து அவரது தலையின் பின்புறத்தில் பலமாக தாக்கியதன் காரணமாக அவர் குறித்த இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


 

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (29) இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து ஃபெர்ண்ட்லீ கல்லி கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

 


"பென்னின் மறைவால் நாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். அவருடைய மரணம் கிரிக்கெட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பென் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு தலைவராகவும் சிறந்த சாதனையைப் படைத்திருந்தார். அவர் அணிக்கு ஒரு நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளராகவும் துடுப்பாட்ட வீரராகவும் அவர் இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.


 

மேலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் தங்கள் X பதிவின் மூலம் இரங்கலை பதிவிட்டுள்ளது.

 


அதில், “17 வயதான மெல்போர்ன் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் வலைகளில் துடுப்பாட்டம் செய்யும் போது தலையில் பந்து தாக்கி இறந்தது மிகப்பெரிய இழப்பாகும்” என்று தெரிவித்துள்ளது. இது தவிர, பல்வேறு தரப்பினரும் தங்களுடைய இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.



Post a Comment

0 Comments