மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிக சக்தி வாய்ந்த நாடாக கருதப்படுகின்ற சவூதி அரேபியாவை, நேட்டோ அல்லாத முக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் சேர்த்துள்ளதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இஸ்ரேல் - காஸா போரில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு வந்த சவூதி அரேபியாவுக்கு, 'நேட்டோ (NATO) அல்லாத நாடுகள் கூட்டமைப்பு' அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், "இத்தருணத்தில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நேட்டோ அல்லாத நாடுகளின் கூட்டமைப்பில் இன்று முதல் சவூதி அரேபியா இணைகிறது.
இக்கூட்டமைப்பில் சவூதி அரேபியாவை வரவேற்கும் வகையில், அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை அந்த நாட்டிற்கு விற்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இளவரசரான முகமது பின் சல்மான், "அமெரிக்காவில் சவூதி அரேபியாவின் முதலீட்டை பல மடங்கு அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இதன்படி, தற்போதைய முதலீடான 600 பில்லியன் டொலரை, 01 ட்ரில்லியன் டொலராக அதிகரிக்க போகின்றோம்.
நீங்கள் உருவாக்கி கொடுத்துள்ள வாய்ப்பு, இன்றைய தினத்திற்கானதல்ல. அது நீண்ட நெடிய காலத்திற்கான வாய்ப்பு" என்று தெரிவித்துள்ளார்.

0 Comments