பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டு, அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் பல நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டக்காரர்கள் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படுமென்று எதிர்பார்த்து டாக்கா மற்றும் பங்களாதேஷின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் மோதலிலும் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற பொலிஸார், அவர்கள் மீது தடியடி மேற்கொண்டும் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி அவர்களை அங்கிருந்து கலைத்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த போராட்டக்காரர்கள் பொலிஸாரின் மீது செங்கல் உள்ளிட்ட பொருட்களை வீசி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments