Ticker

10/recent/ticker-posts

பெண்கள் பாதுகாப்புக்கு மூன்று அவசர தொலைபேசி இலக்கங்கள்

 பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று (24) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார். 

நாட்டில் வாழும் அனைத்துப் பெண்களும் சம உரிமையுடன் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுத்தல், சமூக ஆரோக்கியத்துடனும் சமூக பாதுகாப்புடனும் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதனை நோக்கமாக கொண்டு இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பெண்களை இழிவுபடுத்தல், அவதூறுகளை எழுப்புதல், அவமானம் மிக்க பேச்சுகளுக்கு வழிவகுத்தல் போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு அவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அத்தோடு, இச்செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் முறைபாடளிக்க 03 அவசர சேவை தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இதன்படி, சமூகத்தில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்கள், பொலிஸ் திணைக்கள பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் 109 என்ற இலக்கம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய உதவி சேவையின் 1938 எனும் இலக்கம், இலங்கை கணினி அவசர ஆயத்த அணியின் 101 ஆகிய தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்த முடியும். 

மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின், 2024 ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம், உலகம் முழுவதும் சுமார் 315 மில்லியன் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments