தான் சமைத்த முட்டைக் குழம்பு ருசியாக இல்லையென்று கூறியதற்காக, கணவனின் நாக்கை மனைவி கடித்துத் துப்பிய விசித்திரமான சம்பவமொன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பத்வுன் மாவட்டத்திலுள்ள தம்பதிக்கு இடையிலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது.
சம்பவ தினத்தன்று இரவு மனைவி முட்டைக் குழம்பு சமைத்துள்ளார். சாப்பிட அமர்ந்த கணவர், குழம்பை ருசி பார்த்த பின்னர், "குழம்பு ருசியாக இல்லை" என்று குறை கூறியுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி திடீரென்று கணவனின் நாக்கை மிகக் கடுமையாகக் கடித்து இழுத்துள்ளார். இதில் கணவனுடைய நாக்குத் துண்டாகி கீழே விழுந்துள்ளது.
வலி தாங்க முடியாமல் அலறிய கணவரை உறவினர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த கணவனின் நாக்கு சுமார் 2.5 சென்றி மீட்டர் (2.5 cm) அளவிற்குத் துண்டிக்கப்பட்டுள்ளது. நாக்கு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால், அறுவைச் சிகிச்சை செய்தாலும் அதனை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று வைத்தியர்கள் கை விரித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நபர் வாழ்நாள் முழுவதும் பேசுவதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானது சமையலை குறை கூறியதால் கணவனின் நாக்கையே துண்டித்த மனைவியின் செயல் அப்பாகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments