நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் பட்டாசு மற்றும் வான வேடிக்கை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக சிறுவர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என்றும், மதுபோதையில் எக்காரணம் கொண்டும் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். அதிக சோர்வு மற்றும் தூக்கமின்மை விபத்துக்களுக்கு காரணமாக அமைவதாலும், அது குறித்தும் அவதானமாக இருக்க வேண்டும்.
தூய்மையான உணவுகளை மாத்திரம் உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை கொதித்தாறிய நீரையே பருகுங்கள். நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள், திருவிழாக் காலத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறினாலும் மருந்துகளை உட்கொள்வதற்கு மறக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருவிழாக் காலத்தின் பின்பு இவ்வாறான நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற வீதம் அதிகரிப்பதாக அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 Comments