ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் 21 மணி நேரத்துக்கும் மேல் இடம் பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என்று அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரண்டு நாடுகளுக்குமிடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படுமென்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் வெளியிட்ட அறிக்கையில், “ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடற்பகுதியினுடைய பாதுகாப்பு என்பது அனைவருக்குமானது அல்லது யாருக்கும் உரிமையில்லாதது என்று இஸ்லாமியக் குடியரசான ஈரானின் ஆயுதப் படைகள் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவிக்கின்றது.
ஈரான் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பில் ஆயுதப் படைகளின் உறுதியான பாதுகாப்பு தொடரும். மேலும், பலமுறை எச்சரித்ததன்படி, எதிரி தரப்பு கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு அனுமதியில்லை; அது எப்போதும் இருக்கப் போவதில்லை. மற்ற கப்பல்கள் ஈரான் ஆயுதப் படைகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
போர் முடிந்த பின்னரும் ஈரானின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தருகின்ற விதமாக அமெரிக்கா நடந்து கொள்வதால், ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை ஈரான் உறுதியாகச் செயற்படுத்தும். சர்வதேச கடல் பகுதியில் கப்பல்களின் நடமாட்டத்திற்கு குற்றவாளி நாடான அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானதாகும். அது கடற்கொள்ளைக்குச் சமமானதாகும்.
ஹோர்முஸ் நீரிணைப் பிரச்சினையில் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால், வளைகுடா நாடுகளிலுள்ள துறைமுகங்களில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்று ஈரான் அறிவித்துள்ளது.

0 Comments