Ticker

10/recent/ticker-posts

டொலரிலிருந்து யுவானுக்கு: உலக எரிசக்தி வர்த்தகத்தில் புதிய திருப்பம்

 உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே உலுக்குகின்ற ஒரு அதிரடி மாற்றமாக, ஈரான் நாட்டு எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீன யுவானைப் (Chinese Yuan) பயன்படுத்துவதற்கு ஜப்பான் முடிவு செய்துள்ளது. 

இது 'பெட்ரோ டாலர்' (Petrodollar) சிதைந்து, 'பெட்ரோ யுவான்' (Petroyuan) சகாப்தம் தொடங்குவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது.

கடந்த பல தசாப்தங்களாக உலக நாடுகள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் எண்ணெய் வாங்க வேண்டுமென்றால் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற விதி இருந்தது.

இதுவே அமெரிக்க டாலரை உலகின் முன்னணி கையிருப்பு நாணயமாகவும் (Reserve Currency) மாற்றியது. அமெரிக்காவின் பொருளாதார செழிப்புக்கும் உலகளாவிய ஆதிக்கத்திற்கும் இதுவே முதுகெலும்பாக இருந்தது. அது பழைய கதையாகும்.

தற்போது ஜப்பான் எடுத்துள்ள குறித்த முடிவு, அமெரிக்காவின் நிதி மேலாதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

Bloomberg ஊடகத்தின் கட்டுரையாளர் Brooke Sample என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பல தசாப்த கால உலகப் பொருளாதார நிலைமை (Status Quo) இந்த ஈரான் போரினால் உடைந்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவினுடைய கடன் வாங்கும் செலவைக் குறைத்து, உலக இருப்பு நாணயமாக டாலரை வலுப்படுத்திய அந்த 'பெட்ரோ டாலர் சுழற்சி' (Petrodollar Loop) தற்சமயம் முறிந்து விட்டது."

— Bloomberg Opinion, ஏப்ரல் 11, 2026.


இதுதான் அந்த செய்தி.

அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜப்பான் நாடே இத்தகைய முடிவை எடுத்திருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ஈரான் போரில் அமெரிக்கா சந்தித்த சூழல், அமெரிக்காவை இனிமேல் நம்ப முடியாது என்ற எண்ணத்தை ஜப்பானிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜப்பானைத் தொடர்ந்து தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் தைவான் போன்ற நாடுகளும் இதே பாதையைப் பின்பற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏற்கனவே தென் கொரியா, ஈரான் நாட்டுடன் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்புத் தூதரை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பானின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

  1. சீன யுவானில் பணம் செலுத்துவதன் மூலமாக, ஈரான் எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் 'ஹார்முஸ்' (Strait of Hormuz) நீரிணையை எவ்வித தடையுமின்றி கடக்க முடியும் என்று தெரிகிறது. அவ்வாறான பயண பாதுகாப்பையே ஜப்பானும் விரும்புகிறது.
  2. Bloomberg சுட்டிக்காட்டியபடி, பெட்ரோ டாலர் சுழற்சி உடைந்திருப்பது அமெரிக்காவின் கடன் வாங்கும் திறனைப் பாதிப்பதுடன், டாலரின் மதிப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது அமெரிக்கா மீதான ஜப்பானின் நம்பிக்கையினை சிதைத்துள்ளது.
  3. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும், தனது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு (Energy Security) ஜப்பான் முன்னுரிமை ( Japan First) வழங்கியுள்ளது.
  4. ஈரான் போரில் அமெரிக்கா அடைந்த பின்னடைவு மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவுகின்ற பதற்றம் காரணமாக, அமெரிக்காவை இனிமேல் ஒரு நம்பகமான பாதுகாப்பு கூட்டாளியாக மட்டும் பார்க்காமல், தமது சுயநலன் சார்ந்து ஜப்பான் Hedging (reducing risk )செய்யத் தொடங்கியுள்ளது.
  5. ஜப்பான் வெறும் சாதாரண நாடு அல்ல, அது G7 நாடுகளில் மிக முக்கியமான பணக்கார நாடாகும்.
  6. எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவின் 38 டிரில்லியன் டாலர் பொதுக் கடனில்,பெரும் பகுதியான 1.2 ட்ரில்லியனை (அதிகப்படியான கடன் பத்திரங்களை) ஜப்பானே வைத்துள்ளது.
  7. ஜப்பான் தனது கைவசமுள்ள அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை (US Treasuries) சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கி, அதற்குப் பதிலாக சீன யுவானை தனது கையிருப்பாகச் சேமிக்க ஆரம்பித்தால், அது அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பேரிடியாகவே அமையும். ஜப்பான் போன்றதொரு மிகப்பெரிய முதலீட்டாளர் விலகினால், உலகச் சந்தையில் டாலரின் மதிப்பு நாம் எதிர்பார்ப்பதை விடவும் மிக விரைவாகச் சரிந்து நொறுங்கக் கூடும்.

ஜப்பானின் இந்த "Japan First” கொள்கை, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பானின் இந்த முடிவு உலக வரலாற்றில் ஒரு விசித்திரமான முரண்நகையாகும் (Irony). 

இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா & நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் ஜப்பானை நிலைகுலையச் செய்தன. ஆனால், இன்று ஜப்பான் ஏவியிருக்கும் "டாலர் நீக்கம்" (Dedollarisation) எனும் பொருளாதார அணுகுண்டானது ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரத்தையும் நிர்மூலமாக்கும் வலிமை கொண்டதாக மாறியுள்ளது எனலாம்.

அன்று அமெரிக்கா இராணுவ ரீதியாக ஜப்பானைத் தாக்கியது, இன்று ஜப்பான் நிதி ரீதியாக அமெரிக்காவினுடைய முதுகெலும்பை தகர்க்கத் தொடங்கியுள்ளது.

ஜப்பான் தமது கைவசமுள்ள டிரில்லியன் கணக்கான அமெரிக்கக் கடன் பத்திரங்களைச் சந்தையில் குவித்து விட்டு, யுவானை நோக்கித் திரும்புவது என்பது வெறும் வர்த்தக மாற்றமல்ல, அது அமெரிக்காவின் உலகளாவிய நிதி ஆதிக்கத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாகும்.

"Japan First " என்ற கொள்கையின் மூலமாக Tokyo ஒரு தெளிவான செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளது: 

"இனி அமெரிக்கா உலகைக் காக்கும் காவலனும் இல்லை: டொலர் உலகின் கையிருப்பு நாணயமும் அல்ல."

ஈரான் போரில் அமெரிக்கா கண்ட தோல்வியைவிட, அமெரிக்காவின் பார்வையில் ஜப்பானின் இந்த துரோகம் அல்லது உலகத்தின் பார்வையில் ராஜ தந்திரம் அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்தும். 

Petrodollar எனும் கோட்டை சரிந்து விட்டது, இனிமேல் உலகப் பொருளாதாரம் ஒரு புதிய திசையை நோக்கிப் பயணிக்க தொடங்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. 



Post a Comment

0 Comments