2027 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறுமென்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ தெரிவித்துள்ளார்.
அதன்படி பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைக் கால அட்டவணையை 2020 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு அடுத்த வருடம் (2027) முதல் முழுமையாகக் கொண்டுவருவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
பழைய அட்டவணைக்கு மாறுவதற்கான ஒரு நிலைமாற்றக் காலமாக நடப்பாண்டு 2026 ஆம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2027 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக, இவ்வருடம் (2026) எஞ்சியுள்ள 02 பாடசாலை விடுமுறை காலங்களும் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டுக்கான GCE (O/L) பரீட்சைகள் எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி டிசம்பர் மாதத்தில் நடைபெறும். இலங்கையின் கல்வி முறைமை கடந்த சில வருடங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
2020 முதல் பரவிய கொவிட் 19 மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து சிரமங்கள் போன்றவற்றால் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன.
சமீபத்தில் ஏற்பட்ட டித்வா சூறாவளி உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்புகளும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக முடக்கியிருந்தன.
இச்சவால்களைக் கடந்து, கல்வி முறையைச் மூலமாக மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மீண்டும் ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு வர முடியும் என்று கல்வியமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0 Comments