Ticker

6/recent/ticker-posts

தனியார் வாகன இறக்குமதிக்கு தயாராகும் அரசாங்கம்.

தனியார் பயன்பாட்டுக்கான வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்திலிருந்து நீக்கப்படும் நிலையில், அந்நிய செலாவணி வெளியேற்றத்தில் அதன் தாக்கத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை உயர்த்துவதும் வரி வருமானத்தை அதிகரிப்பதும், வாகன இறக்குமதித் தடையை நீக்குவதில் அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது. எனினும், வாகன இறக்குமதியை அனுமதிக்கும்போது இன்னும் ஆபத்து காணப்படுகின்றது.

இது, அந்நிய செலாவணி வெளியேற்றத்தையும் ரூபாயின் ஏற்ற இறக்கத்தையும் எவ்வாறு சரியாகப் பாதிக்கும் என்பது தமக்கே தெரியாது என்று திறைசேரியின் அதிகாரியொருவர் உள்ளூர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரே அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் எவ்வளவு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதையும் தங்களால் அளவிட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவதற்கான முன்மொழிவு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன் பிறகு அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும்.

வாகன இறக்குமதித் தடையை நீக்குவது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்ற வகையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், அது சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரிவிக்கப்படும் என்றும் திறைசேரியின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்நிய செலாவணி வெளியேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு தேய்மானம் அதிகமாக நிரூபிக்கப்படுமாயின், சில கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும்  இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தற்போதைய நிலையில், சில வாகன வகைகளில் 05 ஆண்டுகள் வரை பழமையான வாகனங்களை இறக்குமதி செய்யலாம். எனினும், ஏனைய வகை வாகனங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் திறைசேரி அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 300% வீதம் வரை வரி விதிக்கப்படும், மேலும், இவ்வரியில் எந்தவித குறைப்பும் இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை அனுமதிப்பதன் மூலமாக அரசாங்கம் ஆண்டுக்கு 01 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னர், சுமார் 22,000 வாகனத்துக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான 02 ஆம் கட்டத்தின் கீழ் குறித்த இறக்குமதிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக திறைசேரியின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.   


TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x

Post a Comment

0 Comments