Ticker

6/recent/ticker-posts

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இச்செய்தியை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 10 ஆம் திகதி இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்ட பின்னர் பாகிஸ்தானின் முதலாவது அமைதி முயற்சி இதுவாகும்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியது.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நிலைப்பாட்டை முன்னெடுக்கும் வரை ஒப்பந்தத்தை முடக்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியாவின் குறித்த முடிவு பாகிஸ்தானில் நெருக்கடியை உருவாக்கும் என்றும் பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின்படி, கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் & ரவி ஆகியவற்றின் நீரை இந்தியாவும், மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்த முடியும்.

ஆனால், பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது படிப்படியாக முற்றிலும் நிறுத்தப்படும் என்று நீர்வள அமைச்சர் சி.ஆர். பாட்டீல் என்பவர் தெரிவித்துள்ளார்.

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பும், நதி நீர் ஒப்பந்தம் குறித்த தனது நிலைப்பாட்டில் இந்தியா மாறாமல் இருப்பதனை தெளிவுபடுத்தியுள்ளது.

“சிந்து நதி நீர் ஒப்பந்தம், அதன் முன்னுரையில் கூறப்பட்டுள்ளதன்படி, நல்லெண்ணம் மற்றும் நட்பை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், பாகிஸ்தான் பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமாக இக்கொள்கைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றும் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments