Ticker

6/recent/ticker-posts

கிறீன்ஸ் கட்சி தலைவரானார் புரட்சிப் பெண்.

 அவுஸ்திரேலியாவில் கிறீன்ஸ் கட்சி தலைவராக லாரிசா வாட்டர்ஸ் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


2025 மே 03 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மெல்பேர்ண் தொகுதியில் களமிறங்கிய கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆடம் பேண்ட் தோல்வியடைந்ததையடுத்து கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று  (15) இடம் பெற்றது. இதன்போது தலைமைப் பதவிக்கு ஏகமானதாக லாரிசா வாட்டர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


லாரிசா வாட்டர்ஸ் 2011 இல் அவர் கூட்டாட்சி அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு குயின்ஸ்லாந்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டத்தரணியாக 09 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

 


இதேவேளை, கிறீன்ஸ் கட்சியில் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்தார் என்பதுடன், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று தலைமையை வழங்கியுள்ளார். அவை தொடர்பான செய்தி தொடர்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

 


இதே வேளை, செனட்டர் லாரிசா வாட்டர்ஸ், கிறீன்ஸ் கட்சியில் இணைத் தலைமை பதவியையும் இவர் வகித்துள்ளார்.

 


அத்துடன், அவுஸ்திரேலிய வரலாற்றில்; பாராளுமன்றத்தில் பாலூட்டிய முதலாவது அரசியல்வாதி என்ற பெருமையும்  இவரையே சாரும்.

 


2017 ஜூன் 22ம் திகதி அவுஸ்திரேலிய பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற செனட்டர் வாட்டர்ஸ் தன்னுடைய 02 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார். அப்போது சபாநாயகர், செனட்டர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் தயக்கம் இல்லாமல் எழுந்த இவர், குழந்தைக்கு பாலூட்டியவாரே சட்டமூலமொன்றை தாக்கல் செய்து அதனை நிறைவேற்றவும் செய்துள்ளார்.

 


பாராளுமன்றத்தில் அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments