நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (21) பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.
இதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்: நாடு முழுவதும் 2025 மே 31 ஆம் திகதியளவில் பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய தேசிய பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்கள் காணப்பட்டன.
அத்துடன் மேல் மாகாணத்தில் 4,630 வெற்றிடங்களும் தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்களும் மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடயங்களும் வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்களும் ஊவாவில் 2,780 வெற்றிடங்களும் வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்களும் கிழக்கில் 6,631 வெற்றிடங்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 வெற்றிடங்களும் வடக்கு மாகாணத்தில் 3,271 வெற்றிடங்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவியது. இதேவேளையில் எதிர்காலத்தில் தேசிய பாடசாலைகளுக்கு விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆசிரியர் சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அரச சேவை நியமன குழுவினூடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comments