Ticker

10/recent/ticker-posts

விளையாட்டு உலகில் மோசமான சாதனை: முதலிடத்தில் இந்தியா.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து பாவனையாளர்களின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் 03 வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு நிலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின் பிரகாரம், இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் 7,113  இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சேகரித்திருந்தது. 

இதில் 260 இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஊக்கமருந்து பாவனையை உறுதிப்படுத்தியுள்ளன. இப்பட்டியலில் பிரான்ஸ் 91 வழக்குகளுடன் 02 வது இடத்திலும், இத்தாலி 85 வழக்குகளுடன் 03 வது இடத்திலும் உள்ளன. 

ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலா 76 வழக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் கடந்த வருடத்தில் ஊக்கமருந்து பாவனை அதிகம் கண்டறியப்பட்ட துறைகள் பின்வருமாறு காணப்படுகின்றன. 

தடகளம் 76 வழக்குகள்

பழுதூக்குதல் 43 வழக்குகள்

மல்யுத்தம் 29 வழக்குகள்

அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக் கால் இறுதி வரை முன்னேறிய மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹுடா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டிகளின் போது, ஊக்கமருந்து அதிகாரிகள் வருகை தந்ததை கண்டு பல வீரர்கள் மைதானத்தை விட்டு ஓடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

இந்தியா 2030 ஆம் ஆண்டு பொதுநலவாய போட்டிகளையும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 

இவ்வாறான சூழலில், ஊக்கமருந்து பாவனை அதிகரித்துள்ளமை சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தனது நற்பெயரைத் தக்க வைப்பதற்கு இந்தியா தனது சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் வலியுறுத்தியுள்ளது. 

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள இந்திய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம், தாங்கள் சோதனைகளின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளதாகவும், விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும், ஊக்கமருந்து பாவனையைக் கட்டுப்படுத்த புதிய தேசிய சட்டமூலம் ஒன்றையும் இந்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments