இலங்கையின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் இடம் பெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு குறித்த பாடசாலையின் அதிபரிடம் இது குறித்து அறிக்கை கோரியுள்ளது.
குறித்த நிகழ்வின் போது மாணவி ஒருவர் மேடையில் பகிரங்கமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
ஒத்திகையில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக தனக்கு வழங்கப்பட வேண்டிய விருது மறுக்கப்பட்டதாக அவர் அதிபர் மீது குற்றம் சுமத்தியிருந்தார். எனினும், தான் ஒத்திகையில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கான காரணம் தனக்கு பரீட்சை இருந்ததன் காரணமாகவே கலந்து கொள்ள முடியவில்லை என்றும், இது தொடர்பாக ஏற்கனவே பாடசாலைக்கு தான் அறிவித்து இருந்ததாகவும், குறித்த பேச்சின் போது அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இச்சம்பவம் தொடர்பில் அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, அதிபரிடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன், அதனை ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பாடசாலையின் பழைய மாணவியர் சங்கம் (OGA) இவ்விவகாரத்தில் முறையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.


0 Comments