Ticker

10/recent/ticker-posts

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் ; பதிவு செய்யும் இறுதித் திகதி அறிவிப்பு.

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை திங்கட்கிழமை (22) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வருபவர்கள் மட்டுமன்றி, விண்ணப்பித்தும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் என்று அனைவரும் இத்தகவல்களைப் புதுப்பித்தல் கட்டாயமாகும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்ட விதிகளுக்கமைவாக, கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியலை வருடத்துக்கு ஒருமுறை மீளாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

அந்த சட்ட ரீதியான தேவையினைப் பூர்த்தி செய்யும் பொருட்டே இத்தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களைப் புதுப்பிப்பதற்கான இறுதித் திகதி 2025 டிசம்பர் 31 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் இக்கால எல்லை மேலும் நீடிக்கப்பட மாட்டாது. இதுவரை இச்செயற்பாட்டை முன்னெடுக்காதவர்கள் விரைவாகச் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயனாளிகள் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்குப் பல்வேறு இலகுவான வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று நேரடியாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக அஸ்வெசும உத்தியோகத்தர்களின் தொழிநுட்ப உதவியைப் பெற்று இணையம் வழியாகவோ குறித்த தகவல்களைப் புதுப்பிக்க முடியும்.

மேலும், உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட அஸ்வெசும விண்ணப்பப் படிவங்களை உரிய பிரதேச செயலகங்களிலுள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவிடம் கையளிப்பதன் மூலமும் அல்லது அருகிலுள்ள தொலைத்தொடர்பு மத்திய நிலையங்களுக்குச் சென்று இணைய வசதியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் இச்செயற்பாட்டை நிறைவு செய்ய முடியும்.

அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகள் அனைவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த கடைசிச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது தகவல்களைப் புதுப்பித்து தொடர்ச்சியான நலன்புரி உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் நலன்புரி நன்மைகள் சபை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


Post a Comment

0 Comments