தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்துகின்ற நோக்கில், நிதி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
2025 டிசம்பர் 05 ஆம் திகதியிடப்பட்ட 2025/08 ஆம் இலக்க வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களை மிகவும் வினைத்திறனுடனும் பயனுள்ள முறையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக புதிய சேர்க்கைகள், விளக்கங்கள் மற்றும் திருத்தங்களுடன் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2025/08ஆம் இலக்க வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையிலுள்ள 3, 5, 6, 7, 9, 11, 12 மற்றும் 14 ஆகிய விடயப் பரப்புகள் திருத்தப்பட்டுள்ளன.
இதில் முழுமையாக சேதமடைந்த வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்கு வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவு, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கான இழப்பீடுகள், மற்றும் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களுக்கான நிவாரணங்கள் போன்ற பல முக்கிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இதன் பிரதான நோக்கமாகும் என்று நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments